ஒரு கல்யாண மண்டபத்தில் சமையல்கட்டில் மிகவும் ருசியான உணவுபண்டங்கள் பல அங்கு சமைத்து வைக்கப்பட்டிருந்தன. அதன் வாசனை அங்கு இருந்த எலியின் மூக்கை எட்டியது. ஆகா! இந்த ருசியான உணவுகளை இப்பொழுது சாப்பிடுவோம் என்று எண்ணி அது மெல்ல உணவு பண்டங்களின் அருகே வந்தது. அப்பொழுது பார்த்து அங்கே சமையல்காரன் வந்துவிட்டான். எலி தப்பித்தோம் பிழைத்தோம் என்று மண்டபத்துக்கு வெளியே ஓடியது. அங்கே மண்டபத்தின் காம்பவுண்ட் சுவரின் மேல் ஒரு காக்கா இருந்தது. அது இந்த எலியை பார்த்துவிட்டது. உடனே அந்த காக்க எலியை தனது அலகால் கொத்த பாய்ந்தது. எலியோ பயந்தது. ஆனாலும் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு காக்கா அண்ணா காக்கா அண்ணா மண்டபத்துக்குள்ளே சமையல்காரன் வந்துவிட்டான் அதனால்தான் நான் அவனுக்கு பயந்து கொண்டு நான் இங்கு வந்தேன. இங்கு நீங்களும் என்னை கொத்தி திண்ண பார்கிறீர்கள். தயவு செய்து எனக்கு உயிர்பிச்சை தாருங்கள்! தயவு செய்து என்மீது கொஞசம் கருணை காட்டுங்கள்! என்று அன்புடன் சொன்னது எலி. அதெல்லாம் முடியாது. எனக்கு ரெம்ப பசிக்கிறது. நான் உடனே உன்னை கொத்தி தின்ன வேண்டும் என்றது காக்கா. "காகம் அண்ணா! உங்கள் பேச்சிலும் ஒரு வித நியாயம் இருப்பதை நான் நன்கு உணர்கிறேன். ஆனால், உங்கள் குஞ்சுக்கு இதைப்போல் ஓர் ஆபத்து நேர்ந்து அது வேறு ஏதாவது பறவையிடமோ, விலங்குகளிடமோ சிக்கிக் கொண்டால் அது என்ன பாடுபடும். உங்கள் குஞ்சு போன்று என்னை நினைத்து எனக்கு உயிர் பிச்சை கொடுங்களேன்!'' என்று பரிவோடு கெஞ்சியது எலி. எலியின் சாமர்த்தியமான பேச்சினால் காகத்தின் மனது இளகிவிட்டது. சிறிது நேரம் யோசனை செய்த காகம் எலியைப் பார்த்து, ""எலியே! உன்னைப் பார்த்த போது எப்படியாவது உன்னை சாப்பிட்டு விட வேண்டும் என்ற எண்ணம்தான் தோன்றியது. உன் அன்பான வார்த்தைகளைக் கேட்கிற போது அந்த எண்ணம் என் மனதைவிட்டு அகன்றுவிட்டது. நீ உன் சாதுர்யமான பேச்சினால் என் மனதினுள் இருக்கிற பாச உணர்ச்சியினைத் தட்டி எழுப்பிவிட்டாய். இனிமேல் நீ பயமில்லாமல் செல்லலாம்!'' என்று கூறியபடி வேறு இரையைத் தேடிப் பறந்து சென்றது. எலியும் உயிர்பிழைத்த மகிழ்ச்சியில் தன் இருப்பிடத்தை நோக்கி வேகமாக ஓடியது. அன்பான பேச்சினால் எதிரியின் மனதைக் கூட மாற்றிவிடலாம் என்பதை அந்த எலி மிக நன்றாகவே அன்று புரிந்து கொண்டது. அன்புக்கு இத்தனை பெரிய சக்தியிருப்பதையும், அது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தின் மூலமாக அறிந்து கொண்டது. தானும் பிறரிடம் அன்போடு இருக்க வேண்டும் என்று அன்று முதல் அது உறுதி பூண்டது.